மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Wednesday 14 September 2011

கல்லூரி


கனவுகளுக்கு சிறகு முளைக்கும் காலம்

கண்கள் வழியே பார்த்த உலகம்
கல்லூரி வழியே இன்னும் பெரிதாய்.

மறுபடி ஒருமுறை வரக்கூடாதா என
கடந்து சென்றவர்களும்
கடந்துவிடக் கூடாது என
வெளியேறப் போகிறவர்களும்
என்னவென்றே தெரியாமல்
புதியவர்களும் எண்ணிக் கொண்டிருக்கும் களம்.


கருவாய்ச் சுமந்ததால் தாய்
வளர்ந்த கருக்களைச் சுமக்கும்
கல்லூரி மனிதனுக்கு
இரண்டாம் கர்ப்பப்பையே!

தனிமைகளுக்குத்
தனிமை கொடுத்த நிமிடங்கள்
தவறவிட்ட தருணங்களின் ஆச்சரியங்கள்
சின்னச் சின்னப் பரிமாற்றங்களிடையேயும்
பரிச்சயப்படும் மகிழ்ச்சி.

தோன்றிய வேகத்திலேயே மறையும்
நண்பர்கள் மீதான கோபங்கள்
பகிர்ந்து கொண்டதால் குறையும்
சோகங்கள்
விடுமுறைக்காக கூறப்படும்
பொய்கள்

கடைசித் தேதி கடந்தும்
திருப்பிக் கொடுக்கப்படாத
நூலகப் புத்தகங்கள்
அடையாள அட்டை அணியாமல் செல்லும்
அவசரங்கள்

அலாரங்கள் அள்ளிச் சென்ற தூக்கங்களைத்
தூவிச் செல்லும் வகுப்பறைப் பாடங்கள்.
அரியர்கள் பற்றிய கவலைகள் ஏதுமற்ற
அரட்டைகள்
அசைன்மென்ட்களை இரவல் கேட்டும்
நண்பர்கள்

கண்ணீர்க் கசிவுகளை நிறுத்தும்
ஆறுதல்கள்
கேள்வி நேரங்களில் வகுப்பறையில் நிலவும்
அமைதி
தேர்வறையில் மறந்து போகும்
பதில்கள்

தயங்கிக் கிடந்த தனித்திறமைகள்
தலைகாட்டும் தருணங்கள்
படியில் நின்றபடி தொடரும்
பேருந்துப் பயணங்கள்

இவையனைத்தையும்
கடந்தே நகரும்
கல்லூரி நாட்கள்.

முழுமனித வாழ்வும் சிறையில்
சிறிய விடுலைக் காலம்
கல்லூரி.

வாலிபத்தின் முடிவிற்கும்
வாழ்வின் துவக்கத்திற்கும்
இடையே உள்ள இடைவெளி.

மனதின் இறுக்கங்களை கலைத்து
இணக்கங்களை ஏற்படுத்தும் இடம்.
காகிதப் பாடங்கள் கற்றுத்தராத
கல்வி கல்லூரியில்.

நட்பு
அன்பு
கோபம்
துரோகம்
மன்னிப்பு
அழுகை
பிரிவு
அனைத்தையும் அறிந்துவிட்ட கல்லூரி
அதனைப் பிறர் மூலமாகவே பிரதிபலிக்கும்.

செல்லும் தூரமும் கடக்கும் நேரமும் குறைவுதான்
சந்திக்கும் உறவுகளும் உணர்வுகளும் அதிகம்.

அனைத்து மாணவர்களும் படிப்பு முடிந்து
சென்றுவிடுவர்.
கல்லூரியின் வாயில் திறந்தே இருக்கும்
புதியவர்களை வரவேற்ற வண்ணம்.

ஜான்சன்
இரண்டாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை.

No comments:

Post a Comment