மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Wednesday 14 September 2011

வகுப்பறை

வகுப்பறை ஓர் கருவறை.
இதில் கருக்கொண்டு
உயிர்த்தெழும்
உயிர்கள் எத்தனை எத்தனை!

ஆண்டு தோறும் சூல் கொண்டு
உயிர் சுமக்கும் தாய் அவள்.


வண்ண வண்ணமாய்
புதுப்புது பட்டாம் பூச்சிகள்
வந்து குவியும் நந்தவனம்.

கவலையின்றி பறந்து திரியும்
இந்த வண்ணத்துப் பூச்சிகளின் ரசனைகளும்
செயல்களும்தான் எத்தனை எத்தனை
என்ன ஓர் உன்னத நட்பு
தோள் சாய்க்கும் தோழமை
ஆர்ப்பாட்டம்இ அரட்டை
அர்த்தமில்லாத உறக்கம்.

செய் என்றால் செய்ய மாட்டார்கள்.
செய்யாதே என்றால் கண்டிப்பாகச் செய்வார்கள்.
கட்டளை மீறல் இங்கு
கட்டாயச் சட்டம்.

வகுப்பறை ஒரு பல்கலைக்கழகம்
எத்தனை பட்டங்கள் பெற்று வந்தாலும்
பேராசிரியர்களுக்கு
இன்னும் பல புதுப்;;;;;புதுப் பட்டங்கள்
இங்குதான் அளிக்கப்படுகின்றன

வகுப்பறை ஒரு சங்கப்பலகை.
குறிப்பு எடுக்கும் பாவனையில்
ஏடுகளில் மாணவர்கள்
கிறுக்கும் கிறுக்கல்களில்
கவிதைகள் பல பிறக்கும்.

வகுப்பறை ஒரு வண்ணப்புங்கா
சில பாட வேளைகளில்
ஆசிரியரின் உதடுகள் பேசும் போது
சில கண்கள் திருட்டுத் தனமாய்
பேசிக் கொள்ளும்.

வகுப்பறை ஒரு தொட்டில்.
ஆசிரியர்களின் இசைத் தாலாட்டில்
சொக்கிப் போய் நித்திரை கொள்ளும்
மாணவக் குழந்தைகளைக்
குறை சொல்வது நியாயமா?
கனவு காணுங்கள் என்று
கலாம் சொன்னதை இப்படியும்
நிறைவேற்றுகிறார்களோ?
நினைவிருக்கட்டும்.
அவர் கனவுக்கு
அக்னிச்சிறகு முளைத்தது
மாணவக் கற்பனைக்கும் சிறகுகள் முளைக்கட்டும்
வகுப்பறை இருக்கைகள்
பேறு பெற்றவை
இந்திய ஆலமரத்தினைத் தாங்கிப்பிடிக்கும்
வருங்கால விழுதுகளை
அவைதானே சுமக்கின்றன

விடுமுறைநாளில் சிற்றாள் பணிக்கு சென்று
படிக்கும் மாணவரையும் சுமக்கின்றன.
வீணாய்ப் பொழுது போக்க வந்து போகும்
விட்டேந்தி மாணவரையும் சுமக்கின்றன

இருக்கைகளுக்கு மட்டுமல்ல,
வகுப்பறை மேசைகளுக்கும் சுமை
அதிகம்தான்.
சிலரின் பெயர்களை
அம்புகள் துளையிட்ட
இதயத்துடன் வேதனையாய்ச் சுமக்கின்றன.

தேர்வு நாட்களில் கூடுதல் சுமை வேறு.
பொடிப்பொடியாய் எழுதப்பட்ட
சின்னச் சின்ன விடைகளையும்;
சமன்பாடுகளையும்
சேர்த்து சுமக்கின்றன.

வகுப்பறைச் சுவர்கள் சுதந்திரமானவை
பட்டம் பெறுவதற்காக அவை படிப்பதில்லை
இச்சுவர்கள் நிரந்தரமானவர்கள்
கல்லூரியின் நிரந்தர மாணவர்கள்
வகுப்பறை
மாணவர் வந்துபோகும் அறையல்ல
அது அறியாமை இருள்
மாய்ந்துபோகும் அறை

வகுப்பறை ஓர் இருட்டறை.
கரன்ட் இல்லாத போது மட்டுமல்ல.
கவனம் இல்லாத போதும்.

வகுப்பறை ஓர் வாசகசாலை
மாணவமணிகள் வாழ்க்கைப் பாடமும்
கற்கும் சர்வகலாசாலை.

வகுப்பறை ஓர் திறவுகோல்
மாணவர்களின் திறமைக்கு.

மாணவர்கள் மட்டுமல்ல,
ஆசிரியர்கள் உருவாவதும்
வகுப்பறைகளில்தான்.
பல நேரங்களில்
ஆசிரியர்களும் கற்கிறார்கள்
மாணவர்களிடமிருந்து.
ஆசிரியர்கள் எல்லோரும்
முன்னாள் மாணவர்கள்தானே!

இதனால்தானோ என்னவோ
ஆசிரியர்களுக்கு வயது ஏறுவதில்லை.
அவர்களை என்றும் இளமையுடன்
வைத்திருக்கும்
வகுப்பறை ஒரு பாற்கடல்.

வகுப்பறை ஒரு வேடந்தாங்கல்.
பறவைகள் மட்டுமல்ல.
இங்கு வரும் ஆசிரியர்களும் பல விதம்.
தூரிகையாய் துயர்துடைக்கும் ஒருத்தர்
துயரளிக்கும் ஒருத்தர்
இன்முகமாய் ஒருத்தர், இறுமாப்புடன் ஒருத்தர்.
தோழமையாய் சிரிக்கும் ஒருத்தர்,
தோட்டாவாய் மனதை தைத்து
சிம்மாசனமிடும் ஒருத்தர்

சில வேளைகளில்
ஆசிரியர் குரல் ஓங்கும், மாணவர் குரல் மங்கும்.
சில வேளைகளில்
மாணவர் குரல் அலறும், ஆசிரியர் குரல் அடங்கும்.
பல கேள்வி வேளைகளில்
மாணவரின் மௌனம் மட்டுமே பேசும் - அங்கு
வகுப்பறையின் உயிர்த்துடிப்பும் மௌனிக்கும்

என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்

வகுப்பறை எனும் கூடத்தில்
மாணவனைச் செதுக்கும் சிற்பி
ஆசிரியர்.
தாய் மட்டுமல்ல,
ஆசிரியரும் பெரிதுவப்பர்,
தன் மாணவனைச் சான்றோன்
எனக் கேட்ட போது.

ஆம்.
மாபெரும் அறிஞர்களும் சாதனையாளர்களும்
உருவாக்கப்படுவது
வகுப்பறைகளில்தான்.

கல்லறை அழைக்கும்   
கடைசிக் காலத்தில்
ஒவ்வொரு மனிதனும்
மீண்டும் செல்ல விரும்பும்
இடங்கள் இரண்டு.
ஒன்று
தாயின் கருவறை
இன்னொன்று
படித்த வகுப்பறை.
 
ராஜரதி
உதவிப் பேராசிரியர், ஆங்கிலத் துறை

No comments:

Post a Comment