மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Friday 9 September 2011

சமச்சீர்க் கல்வி

நீதியும் வெல்லும்
எப்போதாவது.
சமமும் இல்லாமல்
சீரும் இல்லாமல்
கல்வி இருந்த நிலை மாற
உச்சநீதி மன்றம் வழங்கிய
உச்சபட்ச நல்ல தீர்ப்பு
சமச்சீர் கல்வி.

அரசியலில் கல்வி அவசியம்
கல்வியில் அரசியல் அனாவசியம்
என்பதை அனைவருக்கும்
உணர்த்திய தீர்ப்பு.


தமிழ்நாட்டில்
சமத்துத்தை சாகடிக்கத் துடித்த
மேட்டிமைக் காரர்களின்
மேடு பள்ள சித்தாங்களின்
தலையில் விழுந்த அடி.

பிறப்பால் உயர்வு, தாழ்வு
சொல்லும் சமூகத்தில்
வேறுபாடுகள் அகற்ற
முதல் தேவை கல்வி.
ஆனால்
அந்தக் கல்வியே
ஏற்றத்தாழ்வுக்கு காரணமாயிருந்த
விசித்திரநிலை இனி மாறும்.

கல்வியைக் காசாக்கும் வெறியுடன்
தலைவிரித்து ஆடிய
தனியார் பள்ளிகளின்
‘கல்வித் தந்தை’கள் எல்லாம்
கதிகலங்கி நிற்கிறார்கள்.

கொஞ்சமாகவா ஆடினார்கள்?
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய
பெற்றவர்களின் கவலையை
மூலதனமாக்கி
அவர்களைச் சூறையாடி
மூட்டை மூட்டையாய்
முடிந்து சென்றார்கள்.

‘காசுக்கேத்த தோசை’
என்று கல்வியைச் கடைச்சரக்காக
கூவிக் கூவி விற்ற
காட்சிகள் இனி
மறையும்.

அடிப்படை உரிமையை
அற்பத்தனமாய்
காசுக்கு விற்ற
அவலங்கள் இனி
குறையும்.

கல்விக் கொள்கையை மறந்து
கல்விக் கொள்ளையை நிகழ்த்தி
கல்லா கட்டிய முதலாளிகள் இனி
காணாமல் போகட்டும்.

லட்சங்களை அழுது கிடைக்கும்
தனியார் கல்விக்கும்
இலவசமாய் கிடைக்கும்
அரசுக் கல்விக்கும்
இனிப் பாடம் ஒன்றுதான்.

ஏழைக்கும்
பணக்காரனுக்கும்
ஒரே கல்வி.
நினைத்தால இனிக்கிறது.

கான்வென்ட் பிள்ளைகளுடன்
கார்ப்பரேசன் பிள்ளைகள்
இனி பயமின்றி
போட்டியிடலாம்.

பொதுப்பாடத்திட்டம் எனும்
புதுப் பாடநிலை
ஏற்றத்தாழ்வை நீக்கக்
கிடைத்த முதல்படி.
இதில் கவனமாய் அடியெடுத்து
வெற்றிநடை போடும்
நம் பிள்ளைகளின்
வீறுநடையை கண்டு களிப்போம்.
அந்தோணி சாமி
உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை

No comments:

Post a Comment