மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Friday 14 October 2011

பூமி

ஓர் நொடி கூட ஓய்வின்றி
தன்னைத் தானே சுற்றிக்கொண்டும்
எங்களையும் தாங்கிக்கொண்டு
உருண்டு கொண்டிருக்கும் பூமியே நாங்கள்
சுருண்டு விழுவதும் உன்னில்தான்
சுகமாய் வாழ்வதும் உன்னில்தான்.

பூமியே உன்னைப் பற்றி புகழவும் முடியாமல் இகழவும் முடியாமல்
உன்னிலே பூக்கும் புற்றுநோய் பற்றி
புலமை நயத்துடன் பாட வந்துள்ளேன்- உன்
புத்திரன் இங்கு..

அந்தோ பரிதாபம் உன் நிலை ,ன்று
யுத்தமில்லா பூமியாக மாற நேரிட்டு
சுத்தமில்லா பூமியாக மாறின கதைதான் வேதனை….

வேண்டாத எங்களை
வேதனைகள் பல பட்டு
ஏன் சுமக்கிறாயோ…..?
தெரியவில்லை எனக்கு….!

பூமீது அமரும் தேனீயின் சுறுசுறுப்பை விட
பூமியே உன்னை நீயே
சுற்றுவதில் சுறுசுறுப்பு அதிகம் தானே….!

பலருக்கும் நீ தாயாமே….?
பின்பு ஏன் நாயாக நடத்துகிறார்கள்
நயவஞ்சகர்கள்…..
பொத்திப் படுக்க போர்வை கூட இல்லையே உனக்கு,
ஆம்,
ஓசோனிலும் ஓட்டை போட்டு விட்டு
ஓய்யாரமாய் வாழ்கிறார்கள் உன்மீது…..

விசை கொண்டு ஈர்க்கிறாய் எங்களை,
விசம் கொண்டு அழிக்கிறார்கள் உன்னை,
கழிவு என்னும் விசத்தால்……

உன்னை
‘நீலமுத்து’ என்பார்களே, ஒரு வேளை
விசம் நிறைய குடித்ததால்
நீயும் நீலகண்டனாகிப்
போனாயோ……?

பயம்; எனக்கு….!
வீடுகள் பல தாங்கும் உனக்கே
வீடுபேறு நடந்து விடுமோ என்று….!

வேற்றுவாசி உன்னைப் பற்றி
என்னிடம் கேட்டால், என்ன சொல்வது…..?
வடீவமோ ‘கோளம்’
நிலையோ ‘அலங்கோலம்’-
இதுவே எங்கள் ‘பூகோளம்’
என்றா நான் கூறுவது….?

உம் மைந்தர்களாம் இம் மாந்தர்கள்
மடையர்கள் தாமோ…..?
அதனால் தான்,
உன்னைக் காக்க வேண்டும் என்ற
கடமையை மறந்து
கழிவுகளால் கலங்கப்படுத்தி வருகிறார்கள்….

உன் திண்டாட்டம்- பலருக்கு இங்கே
கொண்டாட்டம்.
உன்னைக்
கூரால் கீறத்தெரிந்த கிறுக்கர்களுக்கு
நீரால் ஊற வைக்கத் தெரிய வில்லையே…..!
நீரின்றி நிலமும் உடையும் என்பது இவர்கள் அறியாத ஒன்றோ…..?

பூமியை,
பசுமையாய் பாதுகாப்போம் என்கிறது
பாசத்தோடு ஒரு கூட்டம்….
பசிக்காக பச்சைகளை அழிப்போம் என்கிறது
பாதகத்தோடு இன்னொரு கூட்டம்…

ஞானம் கொண்ட விஞ்ஞானிகலும்
‘நாசா’ என்ற பெயர் கொண்டு உன்னை
நாசம் செய்கிறார்களா, என்ன……?
வெடீகுண்டு சொதனைக்கும் நீதான்….
வேண்டாத குப்பைக்கும் நீதான்….

இவர்களது சோதனைக்கும், சாதனைக்கும்
ஊனக்கு ஏனம்மா வேதனை….?

தன் தாயிடம் புத்துயிர் பெற்றவன்
பூமித் தாயிடம்தான் புதைக்கப்பட வேண்டும்
என்பதை புரியாதிருப்பது ஏன்……?

தங்கம் தேடி- உன்
அங்கம் துளைத்த- உனக்கு
பங்கம் விளைவிக்கும்- என்
பங்காளிகள் அனைவரும்
பைத்தியக்காரர்களே…..!
பாசக்காரர்களா இவர்கள்….
இல்லை இல்லை
நாசக்காரர்கள்…..!

பசுத்தோல் போர்த்திய
இம்மனிதர்கள்
பசும் புல் போர்த்திய
உன்னை பாடுபடுத்துவதுதான் ஏன்....?

மாசுபட்டால் உன் மாரடைத்து
நோய் பல பட்டு- வருகிறது உனக்கு
காய்ச்சல்.....
உடல் சூடான உன்னை சுகப்படுத்தாமல்
“புவி வெப்பமாதல்” என பெயர் ஆட்டி
அதை ஆண்டு ஆண்டு தவறாது
கொண்டாடி வருகிறார்கள்.

கடலளவு கழிவுகளை கொட்டி
கடுகளவும் கவலையின்றி இருக்கிறார்கள்- இந்த
கருப்பு உள்ளம் கொண்ட கபடர்கள்....

உன்னில்
செடி வைக்கவும் குழிப்பறிக்கிறார்கள்
வெடி வைக்கவும் குழிப்பறிக்கிறார்கள
இவர்கள் வித்திடுவது
அன்பிற்கா..........?? அல்லது
அழிவிற்கா.......?

வேண்டாம் இனியும் இந்த
அவலநிலை.....
தங்குவோர்க்கு இல்லாத அக்கரை
தாங்கும் உனக்கு ஏன்
தாயே...?

இனி;,
நல்லதோ....? கேட்டதோ....?
எதுவாயினும் சரி,
உனக்கு
செய்வதையே நீயும்
செய்....!
இவ்வாறு இவர்கள் இனி
தங்குவது வீண், நீ
தாங்குவது வீண்.............!
அசுத்தமே அச்சாணியாய்
வாழும் இந்த அசுரர்கள்
கையில் அகப்பட்ட, நீ
என்று மீள்வாயோ.............?

இப்படிக்கு,
இப்பூமியைக் காப்போம்’
எனக் கோசமிடும் கும்பலுள்
நானும் ஒருவன்.....!
லெனால்டு கிறிஸ்து ராஜ்
மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை

2 comments:

  1. unga family la ellarum kavithai nalla eluthuvingala......... infa um super ah eluthuva....

    ReplyDelete