மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Tuesday 29 November 2011

தமிழ் ஊடகம்

சங்கம் வளர்த்த எம்
சிங்கத் தமிழருக்கு
பங்கம் வைக்க பங்காளிகள்
பலர் பண்டைய காலத்தில்!

தடைகள் பல தகர்த்து
தாய்மொழியாம் தமிழை
சேய்கள் பலர்
செம்மையுற வளர்த்தனர்!


தளர்ச்சியிலா வளர்ச்சிப்பெற்றுவரும்
தற்போதைய சூழலில்
ஊனின்றி உயிர்கொண்ட தமிழ் வளர
உறுதுணை ஊடகமே!

எம்மொழிக்கும் முதல்மொழியான
செம்மொழியாம் நம்மொழி தமிழை
செம்மையாய் வளர்க்க
ஊடகத்தின் உதவி என்பது
உண்மைதான்!

பரமன் துவங்கி
பாமரன் வரை- தமிழைப்
பரப்புவதில் ஊடகத்தின்
பங்கு உன்னதமானது!

இருப்பினும்........

பட்டித்தொட்டியெங்கும் தமிழைப்
பரப்புவதாய் எண்ணி
குப்பைத் தொட்டியெங்கும்
குதறப்படும் குப்பையாத
இழிவுப்படுத்தி வருகின்றனர்
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற படைப்பாளிகள்!

ஊடகம் எனும்
ஊனிலே,
உயர்வு பெற்ற உறுப்பு
“சினிமா”!
படத்திற்கு
தமிழில் தலைப்பு இல்லையெனில்
தணிக்கைக் குழுவிடும்
தாமதம் ஏற்பட்டு
தகராறு நடந்து
தடைப்பட்டு விடுமோ எனத் தயங்கி
தலைப்பு மட்டும்
தங்கத் தமிழில்!

ஏனைய அனைத்தும்
அலங்கோலம்!

ஆகாசத்தை மிஞ்சும்
ஆபாசக் காட்சிகள்

கேட்டால்..................

ஆங்கிலப் பாணியிலே
அன்புப் பரிமாற்றம் என்கின்றனர்
பண்பு நலம் கொண்ட
படைப்பாளிகள்!

வசனங்களில் வரிக்குவரி
ஆங்கிலம்!

தமிழ்ப்பாடல் என்றுக்கூறி
தமிழ்ச்சொல் தவிர
தகாத சொல் அனைத்தையும்
தாரானமாய் பயன்படுத்தி- அது
வெற்றிப்பாடல் என்று
வெற்றுப் பெருமையும் கொள்கின்றனர்!

தமிழ்ப்படங்கள் எதுவும்
தமிழகத்தில் தயாராவதில்லை,
முத்தக்காட்சிகளின் படப்பிடிப்பு
இங்கிலாந்தின் இயற்கைச் சூழலில்,
இரத்தக் காட்சிதளின் படப்பிடிப்பு
அமெரிக்க அடுக்கு மாடியில்!

தமிழிலே
நடிக்க வருவோருக்கு
படிக்கத் தெரியாத மொழி
தமிழாகத்தான் இருக்கும்!

இதுதான் சீரழியும்
சினிமா ஊடகம்!

இந்த வெள்ளித்திரையிடமிருந்து
எஞ்சிய எச்சத்தை எடுத்து
ஏலம் விடுபவர்கள் தான்
சின்னத்திரை சிங்காரர்கள்!

“மலரும் மொட்டும்”
எனும் நிகழ்ச்சிகள்
மாறி- இப்போது
மொட்டையும் கூட விரைவாய்
மலர வைக்கும்
மசாலா நிகழ்ச்சிகள்
வலம் வருகின்றன!

“ஓடி விளையாடுப் பாப்பா”
என்றார் பாரதி, இப்போது
அடுத்தவனோடு
ஆடி விளையாடுப் பாப்பா
என்கிறது ஒரு கூட்டம்!

ஐந்தில் வளைந்தால் தான்
ஐம்பதில் வளையும் என்பதை
தவறாய் புரிந்து கொண்ட
ஆர்வலர்கள்,
சிறார்களையும் சிங்காரமாய்
ஆட வைத்து எங்காவது
ஓடவும் வைக்கின்றனர்!

“ஜோடி எண் 1” என்ற தலைப்பில்
அரைகுறை ஆடையோடு
ஆடவிட்டு அதிலும்
ஆனந்தம் அடைதின்றனர்- இன்றைய
ஊடகத்தின் உண்மை உழைப்பாளிகள்!

அடுத்தது நாளிதழ் நண்பர்கள்,
முக்கியத் செய்திகளை- ஒரு
மூலயிலே போடுவதையும்,
தேவையற்ற செய்திகளை
தெளிவாகப் போடுவதையும்,
தாரக மந்திரமாய்க் கொண்டு
தமிழைப் பறைசாற்றி வருகின்றனர்!

காட்டுவழியே போனப் பெண்
கற்புக்கரசியை
கதற கதற கற்பழித்தனர்
கயவர்கள்- என்று
கட்டை எழுத்தில்
கதம்பம் என்னும் தலைப்பில்
காலைச் செய்தியாக
வெளியிடுபவர்கள் இவர்கள்!

பேனா முனை, கத்தி முனை விட
கூர்மை என்பதால் தான்
தாய் தமிழை இப்படி
குத்தி விளையாடுகின்றனர்
புத்தி இல்லா சில
பித்து பிடித்த நண்பர்கள்!

தமிழிலே வார்த்தைக்கு வார்த்தை
வர்ணம் தீட்டுவதில்
வானொலிக்கு நிகர்
வானொலி தான்!

வானொலியிலே பெரும்பாலும்
பெண்னொலி தான்!

அந்தப் புதுமைப் பதுமைபளின்
தமிழ், புரியாத புதிராய் தான்
இருக்கும்!

அவர்களது அரைகுறைத் தமிழும்
அலங்கோலமாய் தான் இருக்கும்!
இறைவன் மட்டும் தான் அறிவான்
இவர்கள் தமிழ்ப் பயின்ற இடம்
எதுவென்று!

இப்படி இருந்தால்
எப்படி வளரும்
தமிழ்?

உயிர்த்தமிழை ஊடகமே
உதாசினப்படுத்துவது
உக்கி உருக வேண்டி ஒன்று!

இனிய இன்ப நிகழ்வுகளை மட்டும்
இனிதே உலகிற்கு ஒளிபரப்பும்
தமிழ் ஊடகங்கள்,

இலங்கையிலே,
தன் உடன் பிறப்புகள் உயிருக்காக
தவித்து போராடுவதையும்,
இருக்க இடமின்றி
இன்னல் பட்டுக்கொண்டிருப்பதைப்பற்றி
இரக்கப் படுவதுமில்லை, இங்கு
எடுத்துக் காட்டுவதுமில்லை!

உதவத் தான் உள்ளமில்லை
உண்மையையாவது உலகிற்குக்
காட்டலாமே!

தமிழ்ப் பண்பாடு
தலை நிமிராவிடினும் பரவாயில்லை,
தரணியிலே அதன்
தடம் அழியாமலிருத்தலே
நன்று!!
லெனால்டு கிறிஸ்து ராஜ்
மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை

No comments:

Post a Comment