மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Saturday 21 January 2012

தமிழர் வீரம்

தமிழா.. தமிழா..
அகமும் புறமும் போற்றிய
மறத்தமிழன் நீயா?
உண்மைதானா?

எல்லோரையும் போல் உனக்கும்
இரு கண்கள்
ஒன்று காதல்  அது
பழுதாகிப் போனது
இன்னொன்று வீரம்  அது
குருடாகிப் போனது

தமிழர் வீரத்தைத்
தரணிக்கே எடுத்துச் சொன்ன
உன் தாத்தாக்களை
நினைவிருக்கிறதா?
இருக்காது..

கட்டபொம்மன் காணாமல் போனான்
கப்பலோட்டிய தமிழன் கவிழ்ந்தே போனான்
மருது பாண்டியர் மரித்துப் போனார்..

இவர்களையெல்லாம் மறந்து
இன்று நீ வணங்கும் நாயகர்கள் யார்?
இளைய தளபதி..
புரட்சித் தளபதி..
சின்ன தளபதி..
இந்தத் தளபதிகள் எல்லாம்
எந்தப் போர்க்களத்தில்
உனக்காக குருதி சிந்தினார்கள்?
சிந்தி!

ஒப்பனை கூட கலையாமல்
ஒப்புக்கு வாளேந்தி
ஒப்பேற்றும் ஒன்றுமற்ற
செல்லுலாய்ட் சிங்கங்களின்
பின்னால் ஓடலாமா நீ?
அசிங்கமாய் இல்லையா?

முறம் கொண்டு புலி விரட்டியவள்
உன் பாட்டி   அவள்
உனக்குச் சொன்ன
வீரக்கதைகள் இதுதானா?

வேலும் வாளும் தாங்கிய
மறத்தமிழர் கைகள் இன்று
போஸ்டர்களுக்குப்
பசை தடவலாமா.?

மன்னனுக்கு மன்னனாய்
மார்தட்டிய பாண்டியர் வீரம்
இன்று ‘அண்ணனு’க்கு அடியாளாய்
அடிபணிந்து போகலாமா?

அச்சமில்லை அச்சமில்லை என்று
சொன்ன பாரதி  இன்று
தமிழர் வீரத்தில் கொஞ்சமும் மிச்சமில்லை
என்றுணர்ந்தால் மறுபடி மரிப்பான்.

தோழனே
என்ன ஆச்சு?
எங்கு போச்சு உன் வீரம்?

நெல்லை வீரம்
நேற்றோடு போனது
கோவை வீரம்
கோணிக் கொண்டது
சென்னை வீரம்
செத்தே போனது
மதுரை வீரம்
மார்வாரியிடம் தோற்றது

உன் பாட்டன்கள்
கங்கை கொண்டார்கள்
கடாரம் வென்றார்கள்
கடல் பிறகோட்டி
காலத்தையும் வென்றார்கள்.

ஆனால் இன்று..!
நீ அடி வாங்காத இடம் உலகில் உண்டா?
கிழக்காசியாவில் உன்னைக் கிழித்தார்கள்
துபாயில் உன்னைத் துவைத்தார்கள்
ஈழத்தில் உன்னை இழித்தார்கள்
எங்கும் வாங்கிக் கொள்ள மட்டுமே செய்தாய்

ஆனாலும் திருப்பியடித்தான்
ஒரே ஒரு தமிழன்..
அவனும் முந்திக் கொண்டு
நந்திக்கடலில் மரித்தான்.

கூப்பிடு தூரத்தில் குண்டடி பட்டுக்
கிடந்த உன் சொந்தங்களை உனக்குத்
தெரியவில்லையா?
அவர் சிந்துவது உன் குருதி இல்லையா?

தன் சாதிக்காக
அடிக்கடி அரிவாளேந்தும் நீ.. நம்
தமிழ் சாதிக்காக
தலை நிமிர்த்த மறந்ததேன்?
இது நீதியா? உன்னையே நீ கேள்.

கண்ணகியின் சிலம்பு
கட்டபொம்மன் வாள்
மதுரைவீரன் வேல்
பாரதி மீசை
வாஞ்சிநாதன் துப்பாக்கி
பெரியார் கைத்தடி
இதெல்லாம் உனக்கு வெறும் சின்னங்களா?

ஊர் எல்லையில்
உயரமாய் நின்று
உக்கிரம் காட்டும்
அரிவாள் ஏந்திய அய்யனார்
உனக்கு வெறும் மண் பொம்மையா?

வேண்டாம் தமிழா
இதுவல்ல நீ!

குழிக்குள் ஆயுதம் வைத்துப் பதுக்கிப் பார்த்த
இனங்கள் ஆயிரம் உண்டு. - ஆனால்
மொழிக்குள் ஆயுதம் வைத்து அழகு பார்த்த
ஒரே இனம் நீ..!

போதும் என் தோழனே
வீரம்தான் உன் சாரம்
கால்கள் விறைத்து
நிமிர்ந்தெழு
இமைகளை விரி
செத்த பொறு
செத்த பாம்பை விடு
பார்வையைத் திருப்பு
பயத்தை விரட்டு
துணிவைத் துணைகொள்
மவுனத்தை விலக்கு
ரவுத்திரம் பழகு!!
முனைவர் எஸ்.கணேஷ்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதி)

No comments:

Post a Comment