மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Tuesday 10 February 2015

காதல்

கேட்ட மாத்திரத்தில்
மனிதனை மயக்கும்
மந்திர வார்த்தை 
காதல்.

காதலைப் பாடாத கவிஞனும் இல்லை

காதலி தேடாத இளைஞனும் இல்லை.

காதலைக் கடந்துவராத

வாழ்க்கை என்ன வாழ்க்கை?

ஒட்டுமொத்த உலகையும்

தன் காலடியில் வீழ்த்திய
மாவீரன் அலெக்சாண்டரைக் கூட
ஒரு விழியோரப் பார்வையில்
அடித்து வீழ்த்தியது காதல்.

ரோமாபுரிப் பேரரசன் முதல்

தருமபுரி இளவரசன் வரை
காதலுக்காக உயிர் நீத்து
வரலாற்றில் வாழ்பவர்கள் கோடிப் பேர்.

பாரதிக்குக் கவிதை தந்தது காதல்

காரல் மார்க்சுக்கு சிந்தனை தந்தது காதல்
கம்பனுக்குக் காவியம் தந்தது காதல்
ஆனால் அந்த நாளின்
காவியக் காதல் எல்லாம்
கலியுகத்தில் மாறிப் போனது.

இன்று கார்ப்பரேட் உலகில்

காதலின் நிறம் வேறு.

மணிக்கணக்கில் உட்கார்ந்து 

எழுதிய காதல் கடிதத்தை
கால் கடுக்கக் காத்திருந்து
உரிய இடத்தில் சேர்த்த காலம்
எல்லாம் போயே போச்சு.

‘ஐ லவ் யூ ஹனி’ என்று

ஐந்தாறு எழுத்துகளை 
செல்போனில் டைப் செய்து 
இரண்டு நொடிகளில் இருபது பேருக்கு 
‘பார்வர்ட்’ செய்து காதலிக்கிறார்கள்.

புதுசா வந்தவனுக்கு ‘ஹாய்’ சொல்லி

பழசா போனவனுக்கு ‘பாய்’ சொல்வதுதான்
இந்நாளின் காதல் விளையாட்டு.

‘பிரேக் அப்’ ஆன காதலை எறிந்துவிட்டு

மேக் அப்பை மாற்றி
புதுக் காதல் தேடுகிறார்கள்
பாரதி சொல்லாத புதுமைப் பெண்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரே காதலியுடன்

‘வேலன்டைன்ஸ் டே’ கொண்டாடுவது
‘அவுட் ஆப் பேஷனாகி’ விட்டது.

ஒரு கவிஞன் சொன்னான்;
‘உன்னைக் கண்டேன்; என்னை மறந்தேன்
உன் தங்கையைக் கண்டேன்;
உன்னை மறந்தேன்’
இதுதான் இன்றைய காதல்.

பாரதி இன்றிருந்திருந்தால்

தன் வரிகளை மாற்றிப் போட்டிருப்பான்.
‘காதல் காதல் காதல்  காதல் போயின்
இன்னொரு காதல்’ என்று.

காலத்தைக் கடந்து வாழ்ந்த

காதல்களில் காலம் முடிந்துவிட்டது.

இன்று

இருபது ரூபாய் ஐஸ் கிரீமுக்காக
இதயங்களை இடம் மாற்றுகிறார்கள்.

‘காபி ஷாப்’ கூட்டிப் போகாததால்

காலாண்டைக் கூடக் கடக்காமல்
கவிழ்கிறது காதல்.

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யாத

ரோமியோவை எந்த ஜூலியட்டும்
இன்று விரும்புவதில்லை.

காதலைக் கண்ணாகப் போற்றிய

தமிழனுக்கு இன்று
சினிமாதான் காதலிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

கதாநாயகனின் உயிர்க்காதல் எல்லாம்

கதாநாயகியின் உதட்டுச் சாயத்தில்
கரைந்து போகிறது.


மனம் கவர்ந்த காதலியை

மணமுடிக்க சாவு வரைப்
போராடிய காதலர்கள் யாரும் இன்று இல்லை.

காதல் கல்யாணத்தில் முடிந்தால்

அது காதலின் தோல்வி என்றாகிவிட்டது.

காதலித்த பெண்ணையே

கல்யாணம் செய்து கொண்டவனை
துக்கம் விசாரிக்கிறார்கள் நண்பர்கள்.

உருப்படாத காரணங்களுக்காக

உதிர்வதல்ல உண்மைக் காதல்.

உண்மைக் காதல் உலகை மாற்றும்.

வரலாற்றைப் புரட்டிப் போடும்.

சாதியை மறந்து

மதங்களைத் துறந்து
மொழிகளைத் தாண்டி
உயிர்களை வாழ வைக்கும்.

காதலின்றி அமையாது உலகு.

ஆதலினால் காதல் செய்வீர்.!
முனைவர் எஸ். கணேஷ் 
தலைவர் மற்றும் உதவி பேராசிரியர், தமிழ்த்துறை

No comments:

Post a Comment